1. கண்ணன் – என் தோழன்
| புன்னாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம் வத்ஸல ரசம்பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவ தற்கே – இனி |
1 |
| கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்கலக்க மிலாதுசெய் வான்; – பெருஞ் சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்தேர்நடத் திக்கொடுப் பான்; – என்றன் ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்உற்ற மருந்துசொல் வான்; – நெஞ்சம் ஈனக் கவலைக ளெய்திடும் போதில்இதஞ்சொல்லி மாற்றிடு வான். |
2 |
| பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொருபேச்சினி லேசொல்லுவான்; உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்உண்ணும் வழியுரைப் பான்; அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்அரைநொடிக் குள்வருவான்; மழைக்குக் குடை, பசிநேரத் துணவென்றன்வாழ்வினுக் கெங்கள்கண் ணன். |
3 |
| கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்கேலி பொறுத்திடு வான்; – எனை ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்ஆறுதல் செய்திடுவான்; – என்றன் நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்றுநான்சொல்லும் முன்னுணர் வான்; – அன்பர் கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்புகொண்டவர் வேறுள ரோ? |
4 |
| உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்ஓங்கி யடித் திடுவான்; – நெஞ்சில் கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்குகாறி யுமிழ்ந்திடு வான்; – சிறு பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்டபாசியை யெற்றி விடும் – பெரு வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லிமெலிவு தவிர்த்திடு வான். |
5 |
| சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்சிரித்துக் களித்திடு வான்; – நல்ல வன்ன மகளிர் வசப்பட வேபலமாயங்கள் சூழ்ந்திடு வான்; – அவன் சொன்ன படிநட வாவிடி லோமிகத்தொல்லை யிழைத்திடு வான்; – கண்ணன் தன்னை யிழந்து விடில், ஐயகோ! பின்சகத்தினில் வாழ்வதி லேன். |
6 |
| கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்குலுங்கிடச் செய்திடு வான்; – மனஸ் தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சிதளிர்த்திடச் செய்திடுவான்; – பெரும் ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்றுஅதனை விலக்கிடு வான்; – சுடர்த் தீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வருந்தீமைகள் கொன்றிடு வான். |
7 |
| உண்மை தவறி நடப்பவர் தம்மைஉதைத்து நசுக்கிடுவான்; – அருள் வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்மலைமலை யாவுரைப் பான்; – நல்ல பெண்மைக் குணமுடை யான்; – சில நேரத்தில்பித்தர் குணமுடை யான்; – மிகத் தண்மைக் குணமுடை யான்; சில நேரம்தழலின் குணமுடை யான். |
8 |
| கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்குணமிகத் தானுடை யான்; – கண்ணன் சொல்லு மொழிகள் குழந்தைகள்; போலொருசூதறி யாதுசொல் வான்; – என்றும் நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாதுநயமுறக் காத்திடு வான்; – கண்ணன் அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்அழலினி லுங்கொடி யான். |
9 |
| காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்கண்மகிழ் சித்திரத் தில் – பகை மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்முற்றிய பண்டிதன் காண்; – உயர் வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்மேவு பரம்பொருள் காண்; – நல்ல கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்கீர்த்திகள் வாழ்த்திடு வேன். |
10 |
2. கண்ணன் – என் தாய்
(நொண்டிச் சிந்து)
| உண்ண உண்ணத் தெவிட்டாதே – அம்மைஉயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்; வண்ணமுற வைத்தெனக் கே – என்றன்வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள், கண்ணனெனும் பெயருடையாள், – என்னைகட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து மண்ணெனுந்தன் மடியில்வைத்தே – பலமாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். |
1 |
| இன்பமெனச் சிலகதைகள் – எனக்கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள் துன்பமெனச் சில கதைகள் – கெட்டதோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள் என்பருவம் என்றன் விருப்பம் – எனும்இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே அன்பொடவள் சொல்லிவரு வாள்; – அதில்அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். |
2 |
| விந்தைவிந்தை யாக எனக்கே – பலவிதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்; சந்திரனென் றொரு பொம்மை – அதில்தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்; மந்தை மந்தையா மேகம் – பலவண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்; முந்தஒரு சூரியனுண்டு – அதன்முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. |
3 |
| வானத்து மீன்க ளுண்டு – சிறுமணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்; நானத்தைக் கணக்கிடவே – மனம்நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை; கானத்து மலைக ளுண்டு – எந்தக்காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை; மோனத்தி லேயிருக்கும் – ஒருமொழியுலை யாதுவிளை யாடவருங் காண். |
4 |
| நல்லநல்ல நதிகளுண்டு – அவைநாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்; மெல்ல மெல்லப் போயவை தாம் – விழும்விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்; எல்லையதிற் காணுவ தில்லை; – அலைஎற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்; ஒல்லெனுமப் பாட்டினிலே – அம்மைஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். |
5 |
| சோலைகள் காவினங் கள் – அங்குசூழ்தரும் பலநிற மணிமலர் கள் சாலவும் இனியன வாய் – அங்குதருக்களில் தூங்கிடும் கனிவகை கள் ஞாலமுற்றிலும் நிறைந் தே – மிகநயந்தரு பொம்மைகள் எனக்கென வே; கோலமுஞ் சுவையு முற – அவள்கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். |
6 |
| தின்றிடப் பண்டங்களும் – செவிதெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும், ஒன்றுறப் பழகுதற் கே – அறிவுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்; கொன்றிடு மெனஇனி தாய் – இன்பக்கொடுநெருப் பாய் அனற் சுவையமு தாய், நன்றியல் காதலுக் கே – இந்தநாரியர் தமையெனைச் சூழவைத் தாள். |
7 |
| இறகுடைப் பறவைக ளும் – நிலந்திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள் அறைகடல் நிறைந்திட வே – எண்ணில்அமைத்திடற் கரியபல் வகைப்பட வே சுறவுகள் மீன்வகை கள் – எனத்தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்; நிறைவுற இன்பம்வைத் தாள்; – அதைநினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. |
8 |
| சாத்திரம் கோடி வைத்தாள்; – அவைதம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்; மீத்திடும் பொழுதினி லே – நான்வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே கோத்தபொய் வேதங்களும் – மதக்கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும் மூத்தவர் பொய்ந்நடை யும் – இளமூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்; |
9 |
| வேண்டிய கொடுத்திடு வாள்; – அவைவிரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்; ஆண்டருள் புரிந்திடு வாள்; – அண்ணன்அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்; யாண்டுமெக் காலத்தி னும் – அவள்இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்; நீண்டதொர் புகழ்வாழ் வும் – பிறநிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். |
10 |
3. கண்ணன் – என் தந்தை
(நொண்டிச் சிந்து)
| ப்ரதான ரஸம் – அற்புதம்பூமிக் கெனைய னுப்பி னான்; – அந்தப்
புதுமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு; |
1 |
| செல்வத்திற்கோர் குறையில்லை; – எந்தைசேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை; கல்வியில் மிகச் சிறந்தோன் – அவன்கவிதையின் இனிமையொர் கணக்கி லில்லை; பல்வகை மாண்பி னிடையே – கொஞ்சம்பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு; நல்வழி செல்லு பவரை – மனம்நையும்வரை சோதனைசெய் நடத்தை யுண்டு. |
2 |
| நாவு துணிகுவ தில்லை – உண்மைநாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே; யாவருந் தெரிந்திடவே – எங்கள்ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு. மூவகைப் பெயர் புனைந்தே – அவன்முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்; தேவர் குலத்தவன் என்றே – அவன்செய்திதெரி யாதவர் சிலருரைப்பார். . |
3 |
| பிறந்தது மறக் குலத்தில்; – அவன்பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்; சிறந்தது பார்ப்பன ருள்ளே; – சிலசெட்டிமக்க ளோடுமிகப் பழக்க முண்டு; நிறந்தனிற் கருமை கொண்டான்; – அவன்நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்! துறந்த நடைக ளுடையான்; – உங்கள்சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான். |
4 |
| ஏழைகளைத் தோழமை கொள்வான்; – செல்வம்ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்; தாழவருந் துன்ப மதிலும் – நெஞ்சத்தளர்ச்சிகொள் ளாதவார்க்குச் செல்வ மளிப்பான்; நாழிகைக்கொர் புத்தி யுடையான்; – ஒருநாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை. பாழிடத்தை நாடி யிருப்பான்; – பலபாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான். |
5 |
| இன்பத்தை இனிதெனவும் – துன்பம்இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை; அன்பு மிகவு முடையான்; – தெளிந்தறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே, வன்புகள் பல புரிவான்; – ஒருமந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்; முன்பு விதித்த தனையே – பின்புமுறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான். |
6 |
| வேதங்கள் கோத்து வைத்தான் – அந்தவேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை; வேதங்க ளென்று புவியோர் – சொல்லும்வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை; வேதங்க ளென்றவற் றுள்ளே – அவன்வேதத்திற் சிலசில கலந்ததுண்டு; வேதங்க ளன்றி யொன்றில்லை – இந்தமேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். |
7 |
| நாலு குலங்கள் அமைத்தான்; – அதைநாசமுறப் புரிந்தனர் மூடமனிதர், சீலம் அறிவு கருமம் – இவைசிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்; மேலவர் கீழவ ரென்றே – வெறும்வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம் போலிச் சுவடியை யெல்லாம் – இன்றுபொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான். |
8 |
| வயது முதிர்ந்து விடினும் – எந்தைவாலிபக் களையென்றும் மாறுவதில்லை; துயரில்லை; மூப்பு மில்லை, – என்றும்சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை; பயமில்லை, பரிவொன்றில்லை, – எவர்பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை நயமிகத் தெரிந்தவன் காண்; – தனிநடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான். |
9 |
| துன்பத்தில் நொந்து வருவோர் – தம்மைத்தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்; அன்பினைக் கைக்கொள் என்பான்; – துன்பம்அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்; என்புடை பட்ட பொழுதும் – நெஞ்சில்ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்; இன்பத்தை எண்ணு பவர்க்கே – என்றும்இன்பமிகத் தருவதில் இன்ப முடையான். . |
10 |
4. கண்ணன் என் – சேவகன்
| கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்: வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்; ‘ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை’ யென்றால் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்; வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; |
5 |
| பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்; ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்; தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்; உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்; என்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்; |
10 |
| சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்; சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை. இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்; எங்கிருந்தோ வந்தான், ‘இடைச்சாதி நான்’ என்றான்; ”மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் |
15 |
| வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்; சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்; சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்; காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; |
20 |
| இரவிற் பகலிலே எந்நேர மானாலும் சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்; கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே! ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் |
25 |
| நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்” என்றுபல சொல்லி நின்றான் ”ஏது பெயர்? சொல்” என்றேன் ”ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை” என்றான். கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம் ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்; |
30 |
| தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன், ”மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்; கூலியென்ன கேட்கின்றாய்? கூறு” கென்றேன். ”ஐயனே! தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை; நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் |
35 |
| ஆன வயதிற் களவில்லை; தேவரீர் ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை” யென்றான். பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே கண்டு மிகவும் களிப்புடனே நானவனை . |
40 |
| ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு, நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப் பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் |
45 |
| வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன் வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்; தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்; மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய் ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் |
50 |
| பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான். |
55 |
| இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்! கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், |
60 |
| தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்! கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்! கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே! |
5. கண்ணன் என் அரசன்
| பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்; நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோநாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான். |
1 |
| கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே; எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம்இழந்த நாட்கள் யுகமெனப் போகுமே . |
2 |
| படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்; ‘இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்’என்றவர் சொல்லும் ஏச்சிற்கு நாணிலான். |
3 |
| கொல்லப் பூத மனுப்பிடு மாமனேகோலு யர்த்துல காண்டு களித்திட, முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான். |
4 |
| வான நீர்க்கு வருந்தும் பயிரெனமாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும், தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான். |
5 |
| காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம்கதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால் நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே? |
6 |
| நாம வன்வலி நம்பியி ருக்கவும்,நாண மின்றிப் பதுங்கி வளருவான்; தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;சிறுமை கொண்டொழித் தோடவுஞ் செய்குவான். |
7 |
| தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்; மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்வான். . |
8 |
| காலம் வந்துகை கூடுமப் போதிலோர்கணத்தி லேடதி தாக விளங்குவான்; ஆல கால விடத்தினைப் போலவே,அகில முற்றும் அசைந்திடச் சீறுவான். |
9 |
| வேரும் வேரடி மண்ணு மிலாமலேவெந்து போகப் பகைமை பொசுக்குவான்; பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான். |
10 |
| சக்கரத்தை யெடுப்ப தொருகணம்;தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்; இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ ?இதனுள் ளேபகை மாய்த்திட வல்லன்காண்! . |
11 |
| கண்ண னெங்கள் அரசன் புகழினைக்கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன்; திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத்தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான். |
12 |
| நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான். வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளேவேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான். |
13 |
| கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே! அண்ண லின்னருள் வாடி ய நாடுதான்அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே! |
14 |
6. கண்ணன் என் சீடன்
(ஆசிரியப்பா)
| யானே யாகி என்னலாற் பிறவாய் யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய் யாதோ பொருளாம் மாயக் கண்ணன், என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும், என்னைத் துணைக்கொண்டு, என்னுடை முயற்சியால் |
5 |
| என்னடை பழகலால் என்மொழி கேட்டலால் மேம்பா டெய்த வேண்டினோன் போலவும், யான்சொலுங் கவிதை என்மதி யளவை இவற்றினைப் பெருமை யிலங்கின வென்று கருதுவான் போலவும், கண்ணக் கள்வன். |
10 |
| சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே! பேதையேன் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்து பட்டன தொல்லை பலபெரும் பாரதம்; உளத்தினை வென்றிடேன்; உலகினை வெல்லவும், தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும் |
15 |
| சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும், தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும் உற்றிடேன்; இந்தச் சகத்திலே யுள்ள மாந்தர்க் குற்ற துயரெலாம் மாற்றி இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கெனைத் |
20 |
| தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு, மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து, புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும், பல்வகை யால்அகப் பற்றுறச் செய்தான்; வெறும்வாய் மெல்லுங் கிழவிக் கிஃதோர் |
25 |
| அவலாய்மூண்டது; யானுமங் கவனை உயர்நிலைப் படுத்தலில் ஊக்கமிக் கவனாய், ”இன்னது செய்திடேல், இவரோடு பழகேல், இவ்வகை மொழிந்திடேல் இனையன விரும்பேல், இன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய், |
30 |
| இன்னவ ருறவுகொள், இன்னவை விரும்புவாய்” எனப்பல தருமம் எடுத்தெடுத் தோதி, ஓய்விலா தவனோ டுயிர்விட லானேன். கதையிலே கணவன் சொல்லினுக் கெல்லாம் எதிர்செயும் மனைவிபோல், இவனும்நான் காட்டும் |
35 |
| நெறியினக் கெல்லாம் நேரெதிர் நெறியே நடப்பா னாயினன். நானிலத் தவர்தம் மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும் தெய்வமாக் கொண்ட சிறுமதி யுடையேன், கண்ணனாஞ் சீடன், யான் காட்டிய வழியெலாம் |
40 |
| விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும், உலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும் தலையாக் கொண்டு சார்பெலாம் பழிச்சொலும் இகழுமிக் கவனாய் என்மனம் வருந்த நடந்திடல் கண்டேன்; நாட்பட நாட்படக் |
45 |
| கண்ணனும் தனது கழிபடு நடையில் மிஞ்சுவா னாகி, வீதியிற் பெரியோர் கிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனை இகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும் நிலையும் வந்திட்டான். நெஞ்சிலே யெனக்குத் |
50 |
| தோன்றிய வருத்தஞ் சொல்லிடப் படாது. முத்தனாக் கிடநான் முயன்றதோர் இளைஞன் பித்தனென் றுலகினர் பேசிய பேச்சென் நெஞ்சினை அறுத்தது; நீதிகள் பலவும் தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் |
55 |
| சொல்லிநான் கண்ணனைத் தொளைத்திட லாயினேன். தேவ நிலையிலே சேர்த்திடா விடினும், மானுடந் தவறி மடிவுறா வண்ணம், கண்ணனை நானும் காத்திட விரும்பித் தீயெனக் கொதித்துச் சினமொழி யுரைத்தும், |
60 |
| சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும், கேலிகள் பேசிக் கிளறியும், இன்னும் எத்தனை வகையிலோ என்வழிக் கவனைக் கொணர்ந்திட முயன்றேன்; கொள்பய னொன்றிலை. கண்ணன் பித்தனாய்க் காட்டா ளாகி, |
65 |
| எவ்வகைத் தொழிலிலும் எண்ணமற் றவனாய், எவ்வகைப் பயனிலுங் கருத்திழந் தவனாய், குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய் யாதோ பொருளாய், எங்ஙனோ நின்றான். இதனால், |
70 |
| அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற; யான்கடுஞ் சினமுற்று ‘எவ்வகை யானும் கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்’ எனப்பெருந் தாபம் எய்தினே னாகி, ‘எவ்வா றேனும் இவனையோர் தொழிலில் |
75 |
| ஓரிடந் தன்னில் ஒருவழி வலிய நிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான்’ என்றுளத் தெண்ணி இசைந்திடு ஞ் சமயங் காத்திருந் திட்டேன். ஒருநாள் கண்ணனைத் தனியே எனது வீட்டினிற் கொண்டு, |
80 |
| ”மகனே, என்பால் வரம்பிலா நேசமும் அன்பும்நீ யுடையை; அதனையான் நம்பி, நின்னிட மொன்று கேட்பேன்; நீயது செய்திடல் வேண்டும்; சேர்க்கையின் படியே மாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய். |
85 |
| சாத்திர நாட்டமும், தருக்கமும் கவிதையில் மெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும் கொண்டோ ர் தமையே அருகினிற் கொண்டு பொருளினுக் கலையும் நேரம் போக மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி |
90 |
| இருந்திட லாகுமேல் எனக்குநன் றுண்டாம்; பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும் அறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன். ஆதலால், என்பயன் கருதி, எனக்கொரு துணையாய் |
95 |
| என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை வேண்டி நிற்கின்றேன், வேண்டுதல் மறுத்தே என்னைநீ துன்பம் எய்துவித் திடாமே, இவ்வுரைக் கிணங்குவாய்” என்றேன். கண்ணனும், ”அங்ஙனே புரிவேன். ஆயின் நின் னிடத்தே |
100 |
| தொழிலிலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது? காரிய மொன்று காட்டுவை யாயின், இருப்பேன்” என்றான். இவனுடைய இயல்பையும் திறனையுங் கருதி, ”என் செய்யுளை யெல்லாம் நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக் |
105 |
| கொடுத்திடுந் தொழிலினைக் கொள்ளுதி” என்றேன் நன்றெனக் கூறியோர் நாழிகை யிருந்தான்; ‘செல்வேன்’ என்றான்; சினத்தொடு நானும் பழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன் கையினிற் கொடுத்துக் ”கவினுற இதனை . |
110 |
| எழுதுக” என்றேன்; இணங்குவான் போன்றதைக் கையிலே கொண்டு கணப்பொழு திருந்தான், ”செல்வேன்” என்றான். சினந்தீ யாகிநான் ”ஏதடா, சொன்ன சொல் அழித்துரைக் கின்றாய்; பித்தனென் றுன்னை உலகினர் சொல்வது |
115 |
| பிழையிலை போலும்” என்றேன். அதற்கு,. ”நாளவந் திவ்வினை நடத்துவேன்” என்றான். ”இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்துச் செய்கின் றனையா? செய்குவ தில்லையா? ஓருரை சொல்” என்றுமினேன். கண்ணனும் |
120 |
| ”இல்லை” யென் றொருசொல் இமைக்கு முன் கூறினான். வெடுக்கெனச் சினத்தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக் கண்விசந் திதழ்கள் துடித்திடக் கனன்றுநான் ”சீச்சி, பேயே! சிறிதுபோழ் தேனும் இனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே. |
125 |
| என்றுமிவ் வுலகில் என்னிடத் தினிநீ போந்திடல் வேண்டா, போ, போ, போ” என்று இடியுறச் சொன்னேன்; கண்ணனும் எழுந்து செல்குவ னாயினன். விழிநீர் சேர்ந்திட ”மகனே! போகுதி வாழ்கநீ; நின்னைத் |
130 |
| தேவர் காத்திடுக! நின்தனைச் செம்மை செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன். தோற்றுவிட்டேனடா! சூழ்ச்சிகள் அறிந்தேன். மறித்தினி வாராய், செல்லுதி வாழி நீ!” எனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன். |
135 |
| சென்றனன் கண்ணன். திரும்பியோர் கணத்தே எங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்; காட்டிய பகுதியைக் கவினுற வரைந்தான். ”ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்ளுவேன். தொழில்பல புரிவேன், துன்பமிங் கென்றும், |
140 |
| இனிநினக் கென்னால் எய்திடா” தெனப்பல நல்லசொல் லுரைத்து நகைத்தனன் மறைந்தான். மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன் நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்: ”மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல் |
145 |
| அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்; தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெல்லாம் ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்க நீ” என்றான். வாழ்கமற் றவனே! |
150 |