உலகத்தில் சிறந்தது

உலகத்தில் சிறந்தது

முல்லா மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தார்.

மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார்.

ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது.

மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்.

சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி, ” முல்லா உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது நீர் என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டார்.

” சந்தேகமே வேண்டாம். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது” என்று முல்லா ஆமாம் போட்டார்.

மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து ” இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு”  என்று உத்திரவிட்டார்.

நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது.

அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ் பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி ” உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன். நீர்; என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டார்.

” ஆமாம் மன்னர் அவர்களே, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த மட்டில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை”  என்றார் முல்லா

” என்ன முல்லா! பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்;திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே” என்று மன்னர் கேட்டார்.

முல்லா சிரித்துக் கொண்டே ” மன்னர் அவர்களே! என்ன செய்வது? நான் தங்களிடம் அல்லவா வேலை பார்க்கிறேன். பீன்ஸிடமல்லவே” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *